அண்ணன் சீர் திட்டம் என்பது தகுதியான குடும்பப் பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் (ஒரு சவரன்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கும் திருமண உதவித் திட்டமாகும் 'அண்ணன் சீர்' திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் திருமணத்தின் போது மணமக்கள் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட திருமண வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் (அதாவது மணப்பெண்) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் வழங்கப்பட்ட குடும்ப அட்டையில் மணமகளின் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். திருமண அழைப்பிதழ் மற்றும் திருமணப் பதிவுச் சான்றை திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வருமான வரி, தொழில் வரி செலுத்தும் குடும்பங்கள், சொந்தப் பயன்பாட்டுக்கு கார் வைத்திருப்பவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இதில் பயன்பெற முடியாது. பிற துறைகள் அல்லது வாரியங்களின் திருமண நிதியுதவித் திட்டங்களில் ஏற்கெனவே பயன்பெற்றவர்களுக்கும் இத்திட்டத்தில் உதவி வழங்கப்படாது. ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிர), அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் நிறுவனங்களின் குடும்பத்தினரும் பலன்பெற முடியாது. விண்ணப்பிக்கும் முறை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் அருகிலுள்ள அரசு இ-சேவை மையங்கள் அல்லது தமிழ்நாடு அரசு இ-சேவை இணையதளமான https://www.tnesevai.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். திருமணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து, திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம். 5.10.2026 முதல் 15.1.2027 வரை நடைபெறும் திருமணங்களுக்கு 15.1.2027 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு தனித்துவமான விண்ணப்ப எண் வழங்கப்படுவதுடன், விண்ணப்பத்தின் நிலை குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி (SMS), வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகத் தெரிவிக்கப்படும். திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்.