இன்னுயிர் காப்போம் திட்டம்" (IKT) என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு முயற்சிகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. சாலைப் பாதுகாப்பிற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகளை அடைய, கீழ் கண்ட முயற்சிகள் பின்பற்றப்படுகின்றன. அரசாணை நிலை எண்.146, உள்துறை (போக்குவரத்து.V). நாள் 15/3/2022 ன் படி கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர். மாநில குற்ற ஆவண காப்பகத்தின் தலைமையில் நான்கு உறுப்பினர்களுடன் கூடிய சாலைப் பாதுகாப்பிற்கான சிறப்புப் பணிக்குழுவை அமைத்துள்ளது. சாலைப் பாதுகாப்பிற்கான சிறப்புப் பணிக்குழுவின் முக்கிய நோக்கம் பின்வருமாறு:- சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைப்பதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை அடையாளம் காணுதல் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சாலை உரிமையாளர்கள் மூலம் குறுகிய கால தீர்வுகளை செயல்படுத்துவதை கண்காணித்தல் மற்றும் அறிக்கை செய்தல் தமிழ்நாடு சாலைப் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்குவதற்கான அனைத்துத் தொடர்புடைய ஆயத்தப் பணிகளையும் நிறைவு செய்தல், இதன் மூலம் சுமூகமான செயல்பாட்டை எளிதாக்குதல். சாலைப் பாதுகாப்பு ஆணையம் சாலைப் பாதுகாப்பு ஆணையமானது அரசின் முதன்மைச் செயலர் நிலையில் உள்ள மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியின் தலைமையில் செயல்படும். மேலும் காவல்துறைத் தலைவர் நிலையில் உள்ள காவல் அதிகாரி அல்லது கூடுதல் காவல்துறைத் தலைவர் நிலையில் உள்ள காவல் அதிகாரியின் உதவியோடு இணைச் செயலர் நிலையில் உள்ள அதிகாரிகளைக் கொண்டு செயல்படும். சீரான சாலைகள் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் (IKT) சீரான சாலைகள் அதாவது, சாலைகளில் நிகழும் விபத்து குறைப்பு (Fatality Accident Incident Reduction) (FAIR) திட்டம் ஏற்படுத்தப்பட்டு, சாலைப் பொறியியலுக்குத் தீர்வு காணவும், விபத்தில்லா தமிழகத்தை அடைய அறிவியல் பூர்வமாகவும் மற்றும் புதுமையான செயலாக்க திறன் உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நம்மை காக்கும் 48 சாலை விபத்தினால் நிகழும் இழப்புக்களை குறைப்பதற்கும், அதனால் நிகழும் குடும்பங்களின் மருத்துவ செலவை குறைப்பதற்கும் தமிழ்நாடு அரசால் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் நம்மை காக்கும் 48 என்ற திட்டம் தொடங்கப்பட்டது. விபத்து நடந்த முதல் 48 மணி நேர நெருக்கடியான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான மருத்துவ செலவினங்களுக்கான நிதியினை வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. இது சிகிச்சை மறுப்பு மற்றும் தேவையற்ற இட வசதி இடமாற்றங்கள் காரணமாக ஏற்படும் தாமதங்களை மேலும் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இறப்பு மற்றும் நோயுற்ற தன்மையை பெருமளவு குறைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் அதிக விபத்து நடைபெறும் 500 நெடுஞ்சாலை இடங்களை கண்டறிந்து, அதற்கு அருகாமையில் தகுதிவாய்ந்த 640 மருத்துவமனைகள் (422 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 218 அரசு மருத்துவமனைகள்) கண்டறியப்பட்டு, உடனடியாக நோயாளியை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறது. மாவட்ட வாரியாக அவசர சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அவசரகால ஊர்தி செல்லும் கால தாமதத்தைக் குறைக்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கு இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கோல்டன் மணி நேரத்திற்குள் சரியான நோயாளி சரியான மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதை உறுதிப்படுத்த அவசர கால ஊர்திகளின் சேவை இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்ட அனைத்து வகையான மக்களுக்கும், சிகிச்சை மேற்கொள்வதற்காக, ஒரு நபருக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 81 அவசர சிகிச்சை முறைகளில் பணமில்லா அடிப்படையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இன்னுயிர் காப்போம் - உதவி செய் திட்டம் சாலை பாதுகாப்பு தொடர்பாக தகவல் கல்வி மற்றும் தகவல் தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக இன்னுயிர் காப்போம் உதவி செய் திட்டம் என்ற திட்டமும் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.