பெண்களை தன்னிச்சையாக இயங்கச் செய்யவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு நாடு தழுவிய திறன் கட்டமைப்பு மற்றும் தனிநபர் மேம்பாட்டுத் திட்டத்தை தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக தனிநபர் திறன் கட்டமைப்பு, தொழில்சார் திறன்கள், மின்னணு கல்வி மற்றும் சமூக ஊடகத்தின் முறையான பயன்பாடு ஆகியவை குறித்த அமர்வுகளை நடத்துவதற்கு மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களுடன் இந்த ஆணையம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. ஹரியானாவின் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து முதல் திட்டத்தை தேசிய மகளிர் ஆணையம் தொடங்கியுள்ளது. கற்றலுடன் உள்ளுணர்வு, நம்பகத்தன்மை, தகவல் தொடர்பு உள்ளிட்ட திறன்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பை அதிகரிப்பதில் இந்தத் திட்டங்கள் கவனம் செலுத்தும். மின்னணு கல்வி மற்றும் சமூக ஊடகத்தின் முறையான பயன்பாடு பற்றிய அமர்வுகள், இணையம் மற்றும் சமூக ஊடக தளங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். பெண்களுக்கு எதிராக நடைபெறும் சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்துவதுடன் இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்